பிரபல தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று நடத்திய, நாட்டின் பிரபலமான முதலமைச்சர்கள் குறித்த ஆய்வில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முதலிடம் பிடித்துள்ளார்.
82.96 புள்ளிகளுடன் நவீன் பட்நாயக் முதலிடத்திலும், அவரைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
இந்த ஆய்வின்படி, மத்திய பாஜக அரசின் முதலமைச்சர்களான மனோகர் லால் கட்டார் (ஹரியானா) 4.47 புள்ளிகளுடனும், திரிவேந்திர சிங் ராவத் (உத்ரகாண்ட்) 17.72 புள்ளிகளுடனும் இறுதி இடங்களைப் பிடித்துள்ளனர்.
தனது தந்தை பிஜு பட்நாயக்கின் பெயரில் தொடங்கப்பட்ட கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு தலைமை தாங்கிவரும் நவீன் பட்நாயக், ஐந்தாவது முறையாக அம்மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவி வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்த இடத்தில் 81.06 புள்ளிகளைப் பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உள்ளார். ஆக்ரோஷமான அரசியல்வாதியாக அறியப்படும் இவர் 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது
அவருக்கு அடுத்தததாக, கேரளாவில் இடது முன்னணி அரசின் பலம்வாய்ந்த முதலமைச்சரான பினராயி விஜயன் 80.28 புள்ளிகளுடன் உள்ளார்.
சமீபத்திய கரோனா கால நெருக்கடியை பினராயி விஜயன் கையாண்டது அவருக்கு நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றத் தந்தது.
அவரைத் தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி 78.52 புள்ளிகளுடன் உள்ளார். தொடர்ந்து, மகாராஷ்டிராவின் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசின் தலைவரான உத்தவ் தாக்கரே 76.52 புள்ளிகளுடன் உள்ளார்.
சிறந்த அரசியல் திறன்களைக் கொண்ட ஆட்சியாளராக அறியப்படும் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் இந்த ஆய்வில் 27.51 புள்ளிகளை மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு எதிராக இடதுசாரி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்