எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதற்கென ஒரு குறிப்பிட்ட வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை போன்றவை இருப்பது போன்று, அதற்கென ஒரு குறிப்பிட்ட கல்விக் கொள்கையும் இருக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கூற்று பாராட்டத்தக்க, மிகவும் வரவேற்கத்தக்கது. தேசத்தைக் கட்டமைப்பதற்கான உறுதியான அடித்தளத்தில் கட்டப்பட்ட சீரான கல்வி முறை இல்லாததால் ஏராளமானவற்றை இந்தியா பல ஆண்டுகளாக இழந்துள்ளது.
மாணவர்களுக்கு ஏராளமான புத்தக சுமை, தேர்வுகளின் தீவிர மன அழுத்தம் போன்றவற்றை இல்லாமல் செய்து, புதிய சிந்தனை மற்றும் படிப்புகளில் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கம் கொண்ட புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மோடி அரசாங்கம் ஒரு விவாதத்தின் மையமாக இருந்து வருகிறது,
நாட்டில் வேறு எந்த மாநிலமும் அதை செயல்படுத்துவதற்கு முன்பாக குஜராத் மாநிலம் செயல்படுத்தும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ள நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கல்வி என்பது ஒரு பொது சேவை என்று கூறும் மத்திய அரசு, கல்வியின் வணிகமயமாக்கலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஏன் எதுவும் கூறவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன.
கூட்டு நடவடிக்கைகள் குறித்தும், போதுமான ஒதுக்கீடுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான விமர்சனங்களும் பரிந்துரைகளும் செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு முக்கியமான விஷயத்திற்கும் ஒரு பெரிய மாற்றங்கள் முன்மொழியப்படும்போது அதற்கு எதிர்ப்பு இருக்கும் என்பது இயற்கையானது. அவர்களின் சந்தேகங்களை போக்கி அனைவரையும் ஒன்றிணைத்து செல்வதும் முக்கியம்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் தலையீடு குறைவாகவே இருக்கும் என்று பிரதமர் மக்களுக்கு அளித்த வாக்குறுதி வரவேற்கத் தக்கது. வலுவான கல்வி முறை என்பது மனித வளங்களை அதிகரிக்க செய்து, தேசத்தைக் கட்டமைக்கும் நடவடிக்கையில் அவர்களின் அதிகபட்ச பங்களிப்பை அளிக்கும். இந்த முயற்சி பலனளிக்க, கனவு நனவாக வேண்டும்.
தற்போதைய காலத்திற்கு பொருந்தாத கல்வி, அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள இயலாத கல்வி, தரமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்க முடியாத பட்டங்கள் போன்றவை அனைத்தும் கோமா நிலையை எட்டியுள்ள தற்போதைய கல்வி முறையின் அவலநிலையைக் குறிக்கின்றன.
அதிக கல்வித்தகுதி, வேலைவாய்ப்பிற்கான அதிக அளவு அபாயம் என்ற இன்றைய மோசமான நிலைமை தான், மனித வளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு காரணமாகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ ஆய்வில், பள்ளித் தரத்தின் அடிப்படையில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதைக் கண்டறிந்துள்ளது. தரமான கல்வி என்பது மாணவர்களின் உரிமை என்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
தரங்கள் குறைந்திருப்பதை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கும், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் தேவையான ஒரு வலுவான அடித்தளத்திற்காக தாய்மொழியில் கற்பிப்பதை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் ஆர்வம் பாராட்டத்தக்கது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘TET’ (ஆசிரியர் தகுதி தேர்வு) கட்டாயமாக்கப்பட்டால் அது முதல் வெற்றியாகும், பின்னர் அதனை 100% செயல்படுத்த முடியும்.
தாய்மொழியில் கற்பித்தல் என்பது குழந்தைகளின் உளவியல் வளர்ச்சிக்கு உதவுகிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகிறார் தாய்மொழியில் கற்பிப்பதன் மூலம் மட்டுமே வலுவான அடித்தளம் சாத்தியமாகும் என்றும் பிரதமர் நம்புகிறார். மேலும் தாய்மொழியில் கல்வி என்பது இயல்பான சிந்தனை செயல்முறையை வளர்க்கும்.
நமது வளமான இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை வலுவான ஆளுமை, தன்மை, நெறிமுறைகள் கொண்ட ஒரு வலுவான தேசத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது. புதிய கல்வி கொள்கையின் அறிக்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதை செயல்படுத்துவதும் முக்கியம்.
தாய்மொழியில் கற்பிப்பதற்கு எந்தவிதமான எதிர்கருத்து அல்லது எதிர்ப்பும் இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் சமாதானப்படுத்தி, ஒரு ஒருங்கிணைந்த முயற்சிக்கு அவர்கள் ஒத்துழைக்க மத்திய அரசு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். நாடு முழுவதற்குமான முக்கிய சீர்திருத்தம் என்பதால், முழுமையான வேலைவாய்ப்பு விதிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
டிஜிட்டல் கல்வியை தீவிரமாக ஊக்குவிப்பதில் பின்தங்கியிருக்காது என்பதையும், நிதிச் சுமையை சமாளிக்க மாநிலங்களுக்கு உதவுவதையும் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். முந்தைய ஆய்வுகள் 2030ஆம் ஆண்டில் 90 கோடி இளைஞர்களில் இந்தியர்கள் பங்கு அதிகமாக இருக்கும் என்று காட்டுகின்றன, ஆனால் வேலைவாய்ப்புக்கான சரியான திறமைகள் இல்லாததால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இது போன்ற அச்சங்களைத் தீர்ப்பதற்கு, புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் ஆரம்ப பள்ளியிலிருந்து உயர் கல்வி வரையில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிசெய்து, வாழ்க்கை மற்றும் வாழ்வாதார சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.