நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு கடந்த வாரம் அரக்கோணத்திலிருந்து 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்தனர். இவர்கள் நிவர் புயலுக்கு முன்பு மின்கம்பம் அருகில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தி, தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டுனர்.
அதனைத் தொடர்ந்து காரைக்காலில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் சென்று பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், வெள்ளத்திலிருந்து தங்களைக் காத்துக்கொண்டு மற்றவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அவர்கள் கொண்டுவந்த பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாகப் பயிற்சி அளித்துவருகின்றனர்.
இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருவதாக மீட்புக் குழு பொறுப்பு மோகனரங்கன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட தங்கள் பகுதிகளில் மீட்புக் குழுவின் உதவி கிடைக்கும் முன் எங்களை நாங்கள் காத்துக் கொண்டு மற்றவர்களையும் காக்க இப்பயிற்சி பயனளிக்கும் என ஆர்வத்துடன் தெரிவித்தனர்.