மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கை அடுத்த நந்தூர் சின்கோட் பகுதியைச் சேர்ந்த விவசாயி விநாயக் ஹெமடே. இவர் தன்னுடைய நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கை உரத்தினைப் பயன்படுத்தி கொத்தமல்லி சாகுபடி செய்தார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் கொத்தமல்லி விலை அதிகரித்ததை அடுத்து, தனது நண்பரின் உதவியுடன் கொத்தமல்லியை விற்பனை செய்தார். அதில், அவருக்கு இதுவரை இல்லாத அளவாக 12 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது. இதற்கிடையில், விநாயக் கொத்தமல்லி விற்பனையில் கிடைத்த பணத்தை கிரீடமாக அணிந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவத்தொடங்கின.
இது குறித்து கருத்து தெரிவித்த விவசாயி விநாயக், ”இணையத்தில் பரவும் புகைப்படம் உண்மையானது அல்ல, இந்தப் புகைப்படத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன்” என்று கூறினார். மேலும், இயற்கை முறையில் விவசாயம் செய்தாலே, விவசாயிகள் நல்ல லாபத்தை ஈட்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.