கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே திருமணம் முடிவு செய்யப்பட்ட பல்வேறு தரப்பினரும் எளிமையான முறையில் திருமணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எளிமையாக நடந்த திருமண நிகழ்வில் காவல்துறையினர் கலந்துகொண்டு கல்யாணப் பரிசு வழங்கிய சம்பவம் புதுமண தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்ட்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் ஹரினி. இவருக்கும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிகுஞ்சுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது.
குஜராத்திலிருந்து நிகுஞ் காவல்துறையினரின் அனுமதியுடன் நாசிக்கிற்கு தனியாகப் பயணம் மேற்கொண்டுள்ளார். நாசிக்கில் உள்ள மணமகளின் வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் மணமகன் வீட்டிலிருந்து யாரும் நேரில் பங்கேற்காமல் வீடியோ கால் மூலம் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தையறிந்த நாசிக்கின் துணை காவல் ஆணையர் நகாடே, காவலர்களுடன் நிகழ்விடத்திற்கு சென்று திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். அதையடுத்து திருமணப் பரிசாக காவல்துறையினர் சார்பில், திருமண வாழ்த்துப் பாடலான "முபாரக் ஹோ தும்கோ ஹே ஷாதி தும்ஹாரி" என்ற பாலிவுட் பாடல் ஒன்றை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்து வந்திருந்த அனைத்து காவல்துறையினரும் வாழ்த்தியுள்ளனர்.
காவல்துறையினரின் இந்த ஆச்சரியமான திருமண பரிசை எதிர்பாராத புதுமணத் தம்பதியினர், மகிழ்ச்சிபொங்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவின் மத்தியில் இணைந்த காதல் மனங்கள் - உக்ரைனில் புதுமையான முறையில் திருமணம்!