திரைப்பட விமர்சகர் பவானா சோமயாவால் மொழிபெயர்க்கப்பட்ட, பிரதமர் நரேந்திர மோடியின் 'லெட்டர்ஸ் டூ மதர்' என்கின்ற புத்தகம் மின் புத்தகமாகவும் ஹார்ட்பேக்காகவும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளது. இதனை ஹார்பர்காலின்ஸ் பதிப்பகம் வெளியிட உள்ளது.
தன் இளம் வயதில், ஜெகத் ஜனனி எனும் பெண் கடவுளைக் குறிப்பிட்டு ஒவ்வொரு இரவும் தன் டைரியில் அவருக்கு கடிதம் எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, சில மாதங்களுக்கு ஒருமுறை, தன் டைரியின் பக்கங்களைக் கிழித்து அவற்றைக் கொளுத்திவிடுவார். ஆனால் 1986க்கு முந்தைய அவரது டைரியின் பக்கங்கள் கிடைத்த நிலையில் அவை தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன.
"இது இலக்கிய முயற்சி அல்ல, இந்த புத்தகத்தில் எண்ணங்களும், அவதானிப்புகளும் வடிகட்டப்படாமல் நேரடியாக வெளிப்பட்டுள்ளன. நான் ஒரு எழுத்தாளர் அல்ல, நம்மில் பெரும்பாலானோர் எழுத்தாளர்கள் இல்லை. ஆனால் அனைவரும் எண்ணங்களை வெளிப்படுத்த விழையும்போது, பேனா மற்றும் காகிதத்தை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவற்றை எழுத வேண்டிய அவசியமில்லை. ஆனால் இதயத்திற்குள்ளும் தலைக்குள்ளும் என்ன நடக்கிறது, ஏன் என்று ஆராய வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி தன் புத்தகம் குறித்து தெரிவித்துள்ளார்.
இப்புத்தகத்தை மொழிபெயர்த்துள்ள பவானா சோமயா, 2017ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் ஆவார். சினிமா குறித்த பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், "நரேந்திர மோடியின் உணர்ச்சிப்பூர்வமான மேற்கோள்களில்தான் எழுத்தாளரான அவரது வலிமை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவிட்-19 : மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இன்னும் வரையறுக்கப்படவில்லை!