17ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் 353 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி கைபற்றியது. பாஜக 303 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில், மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்றிரவு 7 மணியளவில் பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சுமார் எட்டாயிரம் விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்கள்:
இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாள், இலங்கை மற்றும் தாய்லாந்து நாட்டின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். அத்துடன் மொரீசியஷ் மற்றும் கிரிகிஸ்தான் நாட்டின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் இந்தியத் தலைவர்கள்:
இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜிரிவால் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். இருப்பினும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் சிங் பாஹேல் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை. அத்துடன் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள்:
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரதன் டாடா, அதானி ஆகியோர் விழாவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமலஹாசன், நடிகர் ஷாருக்கான், பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் கொலை செய்யப்பட்ட பாஜக கட்சிப் பிரமுகர்கள் 50 பேரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பு விடுத்ததன் காரணமாகவே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விழாவில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேவேளையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னணி தலைவர்கள் இவ்விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.