சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 4 வயது எல்.கே.ஜி மாணவி லியாலெட்சுமி கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் காவல்துறையினர் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல், ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
இதையடுத்து வழக்கில் ஜாமீன் கோரி மூவரும் தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஜனவரி 8) தள்ளுபடி செய்தது. இதையடுத்து மூன்று பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (ஜனவரி 10) நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: "மகள் மரணத்தில் சந்தேகம்; ரத்தக்கறை இருந்தது" - பள்ளிக் குழந்தையின் தந்தை மனு!
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் விழுப்புரத்தில் பெய்த கனமழையின் காரணமாகத் தொட்டி பராமரிக்கப்படாமல் இருந்ததால் குழந்தை வழி மாறி சென்றதன் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மூவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகிய மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டார். மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.