மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின்103ஆவது பிறந்தநாள்விழா புதுச்சேரி அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை செய்திருந்தது.
இதேபோல் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.
பின்னர் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.