புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "தமிழ்நாட்டிஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எம்எல்ஏக்களை முதலமைச்சர் தகுதிநீக்கம் செய்தார். இதனால் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்றாலும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மக்களுக்கு வாழ்வாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மோடி பிரதமராக வரக்கூடாது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ரஜினிகாந்த் மீது நல்ல மரியாதை உள்ளது. அரசியலுக்கு வர எல்லோருக்கும் தகுதி உள்ளது. அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலுக்கு வருவதும் வராததும் அவர்களது விருப்பம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விருப்பப்பட்டால் வரலாம்.
அரசியலில் இருக்கும் எல்லோருக்கும் சகிப்புத்தன்மை வேண்டும். தீவிரவாதம் எல்லா மதத்திலும் இருக்கிறது. தீவிரவாதம் முடக்கப்பட வேண்டும். இதற்கு எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும். காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் சிலை வைக்கிறது என்றால் அதை சார்ந்துள்ள பாஜக கட்சி என்ன கட்சி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா மதசார்பற்ற நாடாக திகழ்கிறது. நாட்டில் இந்துக்கள் தான் இருக்க வேண்டும். பிற மதத்தினர் இருக்கக் கூடாது என்று கூறுவது அடி முட்டாள்தனம். அரசியலுக்காக ஓட்டு வாங்க இந்து மக்களை ஏமாற்றி பித்தலாட்டம் செய்கின்றனர். மோடி பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும்" என தெரிவித்தார்.