ஜம்மு காஷ்மீர் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று (நவ.19) என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்தது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவத்தில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் மேற்கொண்டதாகவும் அதற்கு பதிலடி தரும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா, உயர்மட்ட புலனாய்வுத்துறை அலுவலர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
வரும் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளை முன்னிட்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை மோடி நடத்தியுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு, நவம்பர் 26ஆம் தேதி, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் மும்பையில் தொடர் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தினர்.
வர்த்தகத் தலைநகரில் நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.