புதுச்சேரியில் நேற்றிரவு (நவ. 19) காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், காரை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கி ஆறுமுகத்தை கொலை செய்ய முயன்றனர். ஆனால் ஓட்டுநர் காரை சாமர்த்தியமாக ஓட்டி இருவரும் கும்பலிடம் இருந்து தப்பினர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யக்கோரியும் ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது காவலர்கள் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து ஆதரவாளர்கள் ஏ.கே.டி ஆறுமுகத்திற்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர்.
இதனால் வழுதாவூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.