தெலங்கானாவில் தற்போதைய தலைமைச் செயலகத்தை இடித்துவிட்டு, புதிய தலைமைச் செயலக கட்டடம் கட்ட முதலமைச்சர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான அரசு முடிவு எடுத்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாநில உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, தற்போதைய தலைமைச் செயலக கட்டடத்தை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை(ஜூலை7) தொடங்கியது. இந்த தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டடம் 1888ஆம் ஆண்டு ஆறாம் நிஜாம் மன்னா் மிா் மஹபூப் அலி கான் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்துக்கு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவ் 'சா்வஹிதா' எனப் பெயரிட்டாா்.
பழைய தலைமைச் செயலக கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட மாநில காங்கிரஸ், பாஜகவினா் எதிா்ப்பு தெரிவித்தபோதும், கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கட்டடத்தின் உள் இரண்டு மசூதிகள் இருந்தன. அந்த மசூதிகளும் பழைய தலைமைச் செயலகத்துடன் இடிக்கப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தன்னை ஒரு மதச்சார்பற்றவர் எனக் காட்டிக் கொள்ளும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இந்த மசூதி இடிப்பின் மூலம் இஸ்லாம் சமூகத்தின் நம்பிக்கையை சீர்குலைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இவ்விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாம் தலைவர்கள் போராடுவதற்குகூட தற்போது அச்சுறுத்தல் வருகிறது' என்றார்.
இதையும் படிங்க...இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!