டிக் டாக் மோகம் என்பது வயது பாரபட்சமின்றி அனைவரையும் ஆட்டிப் படைத்துவருகிறது. அரசு பதவியில் உள்ள காவலர்கள், அலுவலர்கள், மருத்துவர்கள் கூட பணி நேரத்தில் டிக் டாக் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு சிக்கி வருகின்றனர்.
அந்த வகையில், ஒரு சம்பவம் தற்போது தெலங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆம்.. அங்குள்ள கம்மம் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் பணிநேரத்தின்போது டிக் டாக் வீடியோக்களை எடுத்துள்ளனர். அந்த வீடியோக்களில் ஆண், மற்றும் பெண் ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, வசனம் பேசுவது போன்ற கேளிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீடியோக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அலுவலக நேரத்தில் பொறுப்பின்றி டிக் டாக் வீடியோ செய்த 9 ஒப்பந்த ஊழியர்களையும் இடைநீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். மேலும் அவர்களின் பத்து நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அளவுக்கு மீறிய டிக் டாக் மோகத்தால் வேலையையும் சம்பளத்தையும் இழந்த ஊழியர்களின் நிலைமை பல டிக் டாக் விரும்பிகளுக்கு ஒரு நல்ல பாடம் என்றே கூறலாம்.