கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி மீது அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால், எதிர்கட்சியான பாஜகவை விட ஆளும் கூட்டணி அரசியின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.
ராஜினாமா செய்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10பேர் மும்பையில் உள்ள சொகுதி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆட்சியை காப்பாற்றும் நோக்கில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான டி.கே. சிவகுமார், காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று அந்த விடுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர் அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்நது, சிவகுமார், மிலிந்த் தியோரா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்களை மும்பை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலினா மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிட்ம் பேசிய சிவகுமார், "ராஜினாமா செய்த காங்-மஜத சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் எங்களோடு சேர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. அவர்கள் தங்களது கட்சியில் இருந்து பிரிந்து செல்லமாட்டார்கள்" என்றார்.
இது குறித்து கர்நாடக முதலைச்சர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் மும்பை காவல் துறையினர் கடுமையாக நடந்துகொண்டது எரிச்சலூட்டும் விதத்தில் உள்ளது. இதுபோன்று மாகாராஷ்டிரா அரசு நடந்துகொள்வது பாஜகவின் குதிரை பேர அரசியலை தெளிவுபடுத்தியுள்ளது. இது நாட்டின் ஜனநாயகம் மீது வைக்கப்பட்ட கரும்புள்ளியாகும்" என்றார்.