தொலைக்காட்சியின் பார்வையாளர்களை கணக்கிட டிஆர்பி ரேட்டிங் உதவுகிறது. இதனை வைத்தே தொலைக்காட்சியின் பிரபலத்தை மக்கள் அறிகிறார்கள். இதன் அடிப்படையிலேயே, விளம்பர வருவாய் அதிகரிக்கிறது.
இந்நிலையில், ரிபப்ளிக் உள்பட 3 சேனல்கள் வருவாயை அதிகரிக்க டிஆர்பி ரேட்டிங்கை போலியாக அதிகரித்து மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில், ஒரு கும்பல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, மும்பை காவல்துறை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பல்கர் விவகாரத்தில், ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது காவல்துறை அவதூறு பரப்பியது என அர்னாப் கோஸ்வாமி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என மும்பை காவல் துறைக்கு கோஸ்வாமி சவால் விட்டுள்ளார்.
முன்னதாக, மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவல் ஆணையர் பரம் வீர் சிங், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மும்பை காவல்துறை மீதும் மகாராஷ்டிரா அரசின் மீதும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனம் செயல்பட்டது. அதுவே டிஆர்பி மோசடியில் ஈடுபட்டது. இதனை துப்பறிவு குற்ற பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக 2 மராத்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தினரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க எடியூரப்பாவிற்கு பழனிசாமி கடிதம்