இந்தியாவில் கரோனா பரவல் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது.
மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளதையடுத்து, பொதுபோக்குவரத்து படிப்படியாக தொடங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மோனோ மற்றும் மெட்ரோ ரயில்கள் செயல்பட அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோனோ ரயில் போக்குவரத்து தற்போது ஏழு மாதங்களுக்கு பின் இன்று (அக்.18) மீண்டும் தொடங்கியுள்ளது.
இருப்பினும், காலையில் மோனோ ரயிலில் பயணிக்க பொதுமக்கள் பெருமளவில் ஆர்வமாக இல்லை. காலை நேரம் என்பதால் பொதுமக்கள் குறைவாக உள்ளதாகவும் மதியத்திற்கு பின், பொதுமக்களின் வருகை அதிகரிக்கும் என்று நம்புவதாகவும் மும்பை மோனோ ரயில் நிர்வாகத்தின் மூத்த அலுவலர் ரோஹன் சலுங்கே தெரிவித்துள்ளார்.
கரோனா காரணமாக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், "பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க மோனோ ரயில் நிர்வாகத்தால் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ரயில் நிலைத்தின் நுழைவாயிலேயே அனைத்து பயணிகளின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும். அதிக உடல் வெப்பம் உள்ள பயணிகள் மோனோ ரயிலில் பயணிக்க அனுமதியளிக்கப்படாது" என்றார்.
மும்பை நகரில் மெட்ரோ ரயிலும் நாளை (அக்.19) முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிகாரில் பரப்புரையைத் தொடங்கவுள்ள ராகுல்!