இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கரோனா தொற்றால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 205 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரத்து 984 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அம்மாநில அரசு திண்டாடி வரும் சூழலில், அரசு மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மலட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 19 மாடிக் குடியிருப்பு ஒன்றை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்காக அக்கட்டட உரிமையாளர் மெகுல் சங்வி வழங்கி உதவியுள்ளார்.
இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மெகுல் சங்வி, ''இந்தக் கட்டடத்தில் 130 வீடுகள் அமைந்துள்ளன. அனைத்து வேலைகளும் முடிவடைந்து வீட்டின் உரிமையாளர்களிடம் வீடுகள் ஒப்படைக்கப்பட இருந்தன. ஆனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக வீட்டின் உரிமையாளர்களுடன் பேசி, கட்டடத்தை தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றியுள்ளோம். இதுவரை 300 பேர் வரை இந்தக் கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
மெகுல் சங்வியின் இந்த தன்னார்வ உதவிப் பணிக்கு, அமைச்சர் கோபால் ஷெட்டி மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், ''மெகுல் சங்வி போன்றவர்கள் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போல் பலரும் மக்களுக்கு உதவ முன்வருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சீனாவிடம் சரணடைந்த மோடி - ராகுல் காந்தி ட்வீட்