கர்நாடகா சட்டப்பேரவையின் மேலவைக்கான தேர்தல் வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி தங்களது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், பாஜக சார்பில் போட்டியிடும் எம்.டி.பி நாகராஜ் தனது சொத்து விவரங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1,224 கோடி ஆகும்.
நாகராஜ் பெயரில் 884 கோடி ரூபாயும், அவரது மனைவி சாந்தகுமாரி பெயரில் ரூ. 331 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகராஜின் மனைவியிடம் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பில் வைர நகைகளும், நாகராஜிடம் பிளாட்டினம் உள்ளிட்ட இரண்டு கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரிடத்தில் இரண்டு கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து கார்களை வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதில், லேண்ட் ரோவர் (ரூ. 51.50 லட்சம்), மெர்சிடிஸ் - பென்ஸ் கார் (ரூ. 96.12 லட்சம்), பார்ச்சூனர் (ரூ. 29 லட்சம்) உள்ளிட்ட கார்களை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.