தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருச்சி, புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என சேலம் தலைவாசலில் நடந்த அரசு விழாவில் அறிவித்த முதலைமச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது அரசு விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்புகள் குவியும் சூழலில், டெல்டாவின் பிரதான இடங்களான தஞ்சை, நாகை, மற்றும் திருவாரூர் மாவட்டப்பகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மக்களவை தொகுதிகளின் எம்பிக்கள் முதல்வரின் அறிவிப்பு தேர்தலுக்கான ஒன்று என்றும் நடைமுறையில் அதிமுக அரசால் அதனை செயல்படுத்த இயலாது என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லியில் ஈடிவி பாரத்திடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை எம்பி எம்.செல்வராசு, ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இப்படித்தான் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் நடந்தது வேறு என்று கூறினார்.
"முதலமைச்சரின் அறிவிப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், அதனை சாத்தியப்படுத்த மத்திய அரசு சம்மதிக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் என மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதிமுக அதனை ஆதரிக்கிறது.
இந்த நிலையில், எண்ணெய் மற்றும் வாயு துரப்பன பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் அவசியமில்லை என்று மத்திய அரசு உறுதிபட கூறியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு செயல்படுமா என்பதுதான் எனது கேள்வி," என்று அவர் கூறினார்.
மேலும் அவர், "பாஜக கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்களை எல்லாம் ஆதரிப்பதால் எழும் எதிர்ப்புகளை சரிகட்டவும், வரவிருக்கிற 2021 சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே முதலமைச்சர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.
இது குறித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினரான திமுகவின் எஸ். இராமலிங்கம் நம்மிடம் பேசுகையில், "2013-ல் எரிவாயு குழாய்களை வயல்வெளியில் எடுத்து செல்லக்கூடாது என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இன்றைக்கு நாகை, தஞ்சை, திருவாரூரில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய்கள் வயலில்தான் செல்கின்றன.
ஏற்கனவே 100க்கும் அதிகமான துரப்பன பணிகளை டெல்டாவில் மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி. மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் விளக்கி கூறாமல், மக்களை ஏமாற்றும் ஒரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்," என்று அவர் குற்றம்சாட்டினார்.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. திருநாவுக்கரசர் கூறும்போது, முதலமைச்சர் வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், "காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்திருப்பது காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் நெடுநாள் போராட்டததுக்கு கிடைத்த வெற்றியாகும். ஆனால், இதனை வாய்மொழி அறிவிப்பாக வெளியிட்டதோடு நிற்காமல் சட்டப்பூர்வமாகவும் அங்கீகாரம் செய்ய வேண்டும். இதற்கு சட்டப்பூர்வமான ஆணை பிறப்பித்து மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதலும் பெற வேண்டும்," என்று வலியுறுத்தினார்.