கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் அதிசயிக்கும் வகையில் வெற்றி பெற்ற போது, தான் முதல்வராகி விடுவோம் என்ற ஜோதிராதித்ய சிந்தியாவின் கனவைத் தகர்த்து முதல்வரானார், கமல்நாத். அதற்கு பழிவாங்கும் விதமாக, கமல்நாத்தின் அரசை கலைக்கும் ஆயுதமாக மாறியிருக்கும் சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த கையோடு, கட்சியில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேருடன் வெளிநடப்பு செய்துள்ளார். மொத்தமுள்ள 206 உறுப்பினர்களில் 104 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்ற சூழலில் இருக்கும் காங்கிரஸ் வசம், தற்போது 99 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதற்கு மேல் அமைதியாக இருந்தால் கைவசம் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறையக் கூடும் என்பதால், ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா செய்ததைப் போலவே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார் கமல்நாத்.
அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் இந்தப் போட்டியில், பகடைக் காய்களாக இருக்கும் எம்எல்ஏக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, கோடிக்கணக்கான ரூபாய் பணம் குதிரை பேரத்தில் ஈடுபடுத்தப்படும். மற்றொருபுறம் அரசமைக்கவும், அரசைக் கலைக்கவும் கட்சிகள் மேற்கொள்ளும் நெறியற்ற அரசியல் விளையாட்டில் கணக்கில் வராத பணம் கரைபுரண்டோடும்.
தனது முக்கிய அரசியல் கொள்கையான “கை வேண்டாம்” என்பதை உத்வேகத்துடன் தொடங்கி, தற்போது ஆழமாக செயல்படுத்துகிறது, பாரதிய ஜனதா. அரசைக் கலைக்கும் செயலில் ஈடுபடுவது மட்டுமின்றி, எம்எல்ஏக்களை வளைத்துப் போட்டு அதன் மூலம் அதிகளவில் மாநிலங்களவை எம்பிக்களை வெற்றி கொண்டு, அதன் பின் தாங்கள் தோற்ற மாநிலங்களில் வேலைகளைக் காட்டத் தொடங்குவதில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் அதிக பெரும்பான்மை பெற்றதும், தனது வளமையான நிதி மற்றும் நேரடியான, மறைமுகமான தரப்புகளை வைத்து ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா அரசுகளை பழிதீர்க்கும் நடவடிக்கைளில் பாரதிய ஜனதா இறங்கும். இந்த விஷயத்தில் பாரதிய ஜனதா எப்படி களாமாடி வெற்றி பெறும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

இந்த விஷயத்தில் பணம் முக்கிய கருவியாக விளையாடுகிறது. இதற்கு ஆதாரமாக, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியுள்ள ஒரு எம்எல்ஏ, தனக்கு ரூ.25 கோடி அளிக்கத் தயாராக இருந்தார்கள் என்று ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். தனக்கு ரூ.100 கோடி தருவதாக சொன்னார்கள் என்று இன்னொருவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், தண்ணீர் போல செலவழிக்கப்படும் இந்தத் தொகை ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தேர்தல்களில் அதிகளவில் செலவு செய்யும் எம்எல்ஏக்களுக்கு பணமே பிரதான தேவையாக இருப்பினும், இளம் தலைவர்களின் திறன்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு கட்சிக்குள் வளர்ச்சியை அளிப்பதில்லை என்பதும் கட்சித்தாவலுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் நண்பரும் ஆலோசகருமான ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு கட்சியின் மாநிலத் தலைமையில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் கமல்நாத் மற்றும் திக்விஜய் சிங்கின் கூட்டுத் தலைமை அதற்கு வழிவிடாமல் முட்டுக்கட்டை போட்டது தான் இப்போதைய சிக்கல்களுக்கு ஆரம்பப் புள்ளியானது.

இதன் காரணமாக சில மாதங்களாகவே, தனது ட்விட்டர் தகவல்கள் மூலம் காங்கிரஸில் தனது இருப்பை தளர்த்திக் கொண்டே வந்ததுடன், அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தார் சிந்தியா. ஆனாலும் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து தெளிவின்றி தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் 370 சட்டப்பிரிவு விவகாரத்திலும், சமூகத்தை பிளவுபடுத்தும் சமீபத்திய டெல்லி கலவரங்களின் போதும், பாரதிய ஜனதா அரசை கடுமையாக சாட வேண்டிய இடத்தில் காங்கிரஸ் தரப்பில் இவர் அமைதி காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது செயல்பாடுகளின் மூலம், அவரது சந்தர்ப்பவாத அரசியல் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதாவுக்கும் சிந்தியா குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது அனைவரும் அறிந்ததே. பாரதிய ஜனதாவின் நிறுவனர்களில் ஒருவர் அவரது பாட்டி. இரண்டு அத்தைகளும் பாரதிய ஜனதாவின் முக்கிய பதவிகளை வகித்தவர்கள். ஆயினும் காங்கிரஸில் தனது இருப்பைத் தக்க வைத்து முக்கிய பதவிகளை வகிக்க வேண்டும் என்ற உந்துதலால், கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற சிந்தியா, மாநிலங்களவை எம்பியாக முயற்சித்தார்.
குவாலியர் அரண்மனைக்கு எதிரான பிரசாரத்தை கையிலெடுத்த ராணுவ அதிகாரியிடம், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதால் மிகுந்த மனக் கவலைக்கு ஆளானார் சிந்தியா. மூன்று முறை தனக்கு வெற்றி மகுடம் சூட்டிய குணா தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால் துவண்டிருக்கும் சிந்தியா, பாரதிய ஜனதாவில் இணைவதன் மூலம் தனது தொகுதியில் மீண்டும் பலத்தோடு வலம் வரமுடியும் என்று கணக்கு போட்டு காய் நகர்த்துவது தெளிவாக தெரிகிறது.
தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் கமல்நாத், எப்படியாவது சில எம்எல்ஏக்களை இழுக்க முனைப்பு காட்டி வருகிறார். சிந்தியாவின் தேவையை நிராகரித்த கமல்நாத், குவாலியர் வாரிசுக்கு மாநிலங்களவை பதவி அளிக்க முடியாது எனவும், அந்த இடத்தை பிரியங்கா காந்திக்கு அளிப்பதாகவும் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்திருக்கிறார். குவாலியர் “ராஜ வம்சத்திற்கு” எப்போதும் பரிவு காட்டாத திக்விஜய் சிங்கும் இவருடன் கைகோர்த்தது தான், தற்போதைய பிரச்சனை பூதாகரமாக வெடித்ததற்கு காரணம்.
இப்போது, சிந்தியாவின் வெளியேற்றத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்புகள் ஏற்படும். இந்த நிலை காங்கிரஸுக்கு புதிதல்ல. ஏற்கனவே கர்நாடகாவில் தனது ஆட்சியை தக்க வைக்க இயலாமல் 17 எம்எம்ஏக்களை தனது எதிரியான பாரதிய ஜனதாவிடம் பறிகொடுத்து ஆட்சியையும் இழந்தது. தங்கள் கட்சியின் கொள்கையில் உறுதியாக இல்லாத மேம்போக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்வதால் தான், பாரதிய ஜனதா மிக எளிதாக பெரும்பாலான காங்கிரஸாரை வேட்டையாடுகிறது.
வெற்றி பெறுவதற்காக பாரதிய ஜனதா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் முன்பு இருந்தவர்களுக்கு அதிகளவில் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த எம்எல்ஏக்கள் மீண்டும் பாரதிய ஜனதாவுக்கு தாவுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. காங்கிரஸின் இந்த மேம்போக்கான அணுகுமுறையால் இந்துத்வா ஆதரவு எம்எல்ஏக்கள் எங்கிருந்தாலும் பாரதிய ஜனதாவால் எளிதாக ஈர்க்க முடிகிறது.
இது காங்கிரஸை எங்கு கொண்டு விட்டுள்ளது தெரியுமா? 2019 பாரளுமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் என்னும் படகு நிலைகுலைந்து தடுமாறியுள்ளது. இந்த மாபெரும் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை விட்டு விலகிய ராகுல் காந்தி, தேர்தல் வைத்து புதிய தலைமையைத் தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது தாயார் சோனியா காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை. மாறாக புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை சோனியா காந்தி தலைவராக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், சோனியாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் நிலைமையை சீராக்க முடியவில்லை. இந்த சூழலில் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் பிரசாரம் செய்யவில்லை. அதுமட்டுமின்றி தனது கட்சி வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு மாற்றி போடுவதற்கு அனுமதித்தார். பாரதிய ஜனதாவுக்கு சரியான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும் என்ற அவரது எண்ணம் ஈடேறியது. அவரது இந்த நகர்வால் சிலரது தற்காலிக பாராட்டைப் பெற்றார், ஆனாலும் காங்கிரஸின் பலம் மேலும் சுருங்கியது. ஆம் ஆத்மியின் இந்த வெற்றியால் பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு என பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், பழம் பெரும் கட்சியான காங்கிரஸுக்கு இதனால் என்ன பலன் என்று பல்வேறு தரப்பினரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் காங்கிரஸில் வாக்கு சதவீதம் 4 சதவீத்துக்கு சரிந்துள்ளது.

பாரதிய ஜனதாவுக்கு எதிரான பலம் வாய்ந்த எதிர்க்கட்சியை கட்டமைப்பது எப்படி என்பது இப்போதைக்கு காங்கிரஸுக்கு புதிராகவே உள்ளது. சமீபகாலமாக நடந்தேறி வரும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டம், ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான சூழலை உருவாக்கியிருக்கும் சூழலை, ஒரு அரசியல் கட்சியால் சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்று பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். அதே நேரம், சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்காத காங்கிரஸ், அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு நான்காண்டு காலம் இருந்தாலும், இப்போதிருந்தே அதற்கு தயாராக வேண்டும் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த விவாதத்தில் நியாயம் இருந்தாலும், தங்களுக்கு யார் தலைமையேற்று வழிநடத்துவது என்ற குழப்பம் காங்கிரஸில் உள்ளது. தேர்தலில் கட்சி வெற்றி பெற வேண்டுமென்றால், ராகுல் காந்தி சிறுபான்மையினரிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அவரை வழிநடத்துபவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குஜராத் தேர்தலின் போது தேவையின்றி அனைத்து வழிபாட்டுத் தளங்களுக்கு அவர் சென்றது மிகப் பெரிய பின்னடைவு என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் அணியும் தொப்பியுடன் அவர் ஒரு செல்ஃபி புகைப்படம் கூட எடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு, காங்கிரஸ் கட்சியை உருவாக்கும் சிறுபான்மையினரை முன்னிறுத்தும் விஷயத்தில் குழப்பத்தன்மையுடன் அவர் செயல்படுவதாக கூறப்பட்டது. சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் தராத சூழலில், பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரஸுக்கும் வித்தியாசமே இருக்காது எனவும், சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் காங்கிரஸ் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் வெடித்த சூழலில், பெயரளவுக்குத் தான் காங்கிரஸ் தரப்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் நடத்திய சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், காங்கிரஸ் தலைமையில் இருந்து யாரும் நேரில் செல்லாதது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அது மட்டுமின்றி, முஸ்லிம்களை தவறான பாதைகளுக்கு பயன்படுத்தும் காங்கிரஸ் என்று பாரதிய ஜனதாவால் கிண்டல் செய்யப்பட்டது.
இந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் மிகப் பெரிய பங்களிப்புடன் காங்கிரஸ் களமாடினால் தான், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் ஸ்திரமான எதிர்க்கட்சியாக செயல்பட முடியும், இதன் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் பாரதிய ஜனதாவின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அதன் கொள்கைகளை தடுத்து நிறுத்தி, தேசத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து காத்து சுதந்திரம் பெற்றுத் தந்தது போல, அனைத்து தரப்பினரையும் காக்க முடியும்.
ஆயினும், சந்தர்ப்பவாத அரசியலில் திளைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களால், பாரதிய ஜனதாவுக்கு எதிராக களம் கண்டு வெற்றி காண்பது கடினம். இது போன்ற தலைவர்களால் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்கள் எந்த நேரத்திலும் பாரதிய ஜனதாவின் கவிழ்ப்புக்கு தயாராகவே உள்ளன என்பது தான் நிதர்சனம்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி!