இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் திகழ்கிறது. அங்கு முதலமைச்சரைத் தவிர மற்ற அமைச்சர்கள் இல்லாததாலும், குறிப்பாகச் சுகாதாரத் துறைக்கென்று தனியாக அமைச்சர் இல்லாததாலும் விரைந்து நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கு பணிபுரியும் உயர்மட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் பலருக்கும் கோவிட் தொற்று உள்ளதால் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்.
இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் மாஸ்க்குகளுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதைக் கருத்தில்கொண்டு சுமார் 50 லட்சம் குறைந்த விலைகொண்ட மாஸ்க்குகளை கொள்முதல் செய்து அதை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய மத்தியப் பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்மட்ட அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பருத்தியால் செய்யப்படும் இந்தக் குறைந்த விலையுடைய மாஸ்க்குகள் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் என்றும் இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுவதாகவும் அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாஸ்க்குகள் மறு பயன்பாடு செய்யும் வகையில் இருக்கும். மேலும், மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ள பெண்கள் அரசிடம் பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அவ்வாறு பதிவு செய்துகொள்ளும் பெண்களுக்கு முதல்கட்டமாக ஆயிரம் மாஸ்க்குளின் ஆர்டர் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாபில் ஊரடங்கு தளர்வு?... முதலமைச்சர் விளக்கம்