மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத், திக்விஜய் சிங் மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா விலகியதையடுத்து, அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, பெரும்பான்மையில்லாததால் முதலமைச்சர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்தார். இதனால், சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. இதையடுத்து, பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக சிவ்ராஜ் சிங் சௌஹான் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவ்ராஜ் சிங் தலைமையிலான அரசு வெற்றிபெற்றுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவ்ராஜ் சிங் சௌஹான் வெற்றி பெற்றதாக அறிவித்த பின்னர் மார்ச் 27ஆம் தேதிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மூன்று மாதத்திற்கான உணவை இப்போதே பெறலாம் - ராம்விலாஸ் பஸ்வான்