மத்தியப் பிரதேச மாநிலம், சாட்டார்பபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஷீராம். இவருக்கு ஜூன் 14ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவரை நேற்று முன்தினம் (ஜூன் 20) இரவு 9.30 மணியளவில் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று கஷீராம் உடலை உடற்கூறு ஆய்விற்காக பிணவறைக்கு கொண்டு சென்றனர். ஏற்கெனவே நிறைய உடல்கள் ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்ததால், கஷீராமின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்ய முற்பட்டபோது அவரின் உடலில் அசைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் அவரின் நாடித்துடிப்பை பரிசோதித்தனர். அப்போது கஷீராம் உயிருடன் இருப்பது தெரியவந்தது. பின்பு அங்கிருந்து உடனடியாக சிக்கிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் ரோஷன், கஷீராம் இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிணவறையில் அதிக நேரம் இருந்ததால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு இறந்தார் என்று தெரிவித்தார்.