நிர்வாகச் சீர்கேடு, வாராக் கடன் உயர்வு போன்ற பிரச்னைகளில் சிக்கிய யெஸ் வங்கி, கடந்த 5ஆம் தேதி இரவு, ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது குறித்து யெஸ் வங்கி முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் ராணா கபூரிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பின் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக மும்பையில் மத்தியப் புலனாய்வுக் குழு (சிபிஐ) அலுவலர்கள் ஏழு இடங்களில் சோதனை நடத்தினர்.
வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து, மகள்கள் ரோஷினி, ராக்கே, ராதா ஆகியோரின் நிறுவனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.
இதையடுத்து யெஸ் வங்கியின் தற்காலிக நிர்வாகியாக ரிசர்வ் வங்கியால் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் குமாரைத் தவிர, சுனில் மேத்தா, நிர்வாகமற்ற தலைவராக மகேஷ் கிருஷ்ணமூர்த்தி, அதுல் பேடா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது யெஸ் வங்கி மீண்டும் வருகிற 18ஆம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பணக் கட்டுப்பாடு தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. ஆகவே அக்கட்டுப்பாடு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஊழல் ஒரு ஓவியம்; காங்கிரஸ் அதன் ஓவியர்' - பிரியங்கா மீது பாஜக தாக்கு