டெல்லி: நாடாளுமன்றத்திற்கு வரும் பத்திரிகையாளர்கள், ஊழியர்களுக்கு தினமும் ஆன்டிஜென் பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். கரோனா தொற்றால் தள்ளிப்போன நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் சமீபத்தில் தொடங்கியது.
நாடாளுமன்றத்திற்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, முதல் நாள் பரிசோதனையிலே நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வந்த எம்பிக்களில் மொத்தம் 23 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற அலுவலர்கள் புதிய முன்னெச்சரிக்கை வழிமுறையை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இரு அவைகளின் உறுப்பினர்களும் வழக்கமான இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆர்டி பிசிஆர் முறை பரிசோதனை செய்து கொள்ளலாம். நெகட்டிவ் என்ற ரிசலட் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல், கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்களும் கட்டாயம் ஆர்டி பிசிஆர் முறை பரிசோதனை செய்திருக்க வேண்டும். இந்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருந்தால், அவை 72 மணி நேரத்திற்கு செலுப்படியாகும். பின்னர், மீண்டும் பரிசோதனை செய்திட வேண்டும்.
மேலும், ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதற்கும் தாமதமாகும் என்பதால், தினமும் பத்திரிகையாளர்களுக்கும், நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் ஆன்டிஜென் பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும். இதுமட்டுமின்றி, அமைச்சர்களுடன் வரும் அரசு அலுவலர்களும் இந்த வளாகத்திற்கு வருகை தந்த கடைசி 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட்டை காட்டினால் மட்டுமே அனுமதியளிக்கப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனென்றால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகலாத் படேல் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்தப்பட்டுள்ளன.