அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் புரி அருகே நேற்று (மே 3) காலை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள், செல் போன் கோபுரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை முறிந்து விழுந்தன.
இந்த புயலால் ஒடிசாவில் 8 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புயல் குறித்த ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஃபோனி புயல் பாதிப்பு குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்தேன். புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஒடிசாவுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மக்களுக்கு இந்த நாடே துணை நிற்கும்" என மோடி குறிப்பிட்டுள்ளார்.