இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில விவசாயிகளுக்காக 'கிசான் சூர்யோதய யோஜனா' திட்டத்தை தொடங்கிவைக்கிறார். அதன்பிறகு மேத்தா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அண்ட் ரிசர்ச் சென்டருடன் இணைக்கப்பட்ட குழந்தை இதய மருத்துவமனையையும், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் டெலி-கார்டியாலஜிக்கான மொபைல் விண்ணப்பத்தையும் திறந்துவைக்கிறார். மேலும், இந்நிகழ்ச்சியின்போது கிர்னாரில் ரோப்வே சேவையையும் பிரதமர் திறந்துவைக்கிறார். கிர்னார் ரோப்வே உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் குஜராத்தின் பெயர் இடம்பெறும் என்றும், இதன்மூலம் 2.3 கி.மீ தூரத்தை வெறும் 7.5 நிமிடங்களில் சென்றடையலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத்திற்கு பகல்நேர மின்சாரம் வழங்க திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள 'கிசான் சூர்யோதய யோஜனா'வின் கீழ், விவசாயிகளுக்கு அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் கிடைக்கும்.
இந்த திட்டத்தை 2023க்குள் முழுமையாக செயல்படுத்த ஏதுவாக குஜராத் மாநில அரசு மூன்றாயிரத்த 500 கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. திட்டத்தின் கீழ் மொத்தம் மூன்றாயிரத்து 490 சர்க்யூட் கிலோமீட்டர் (சி.கே.எம்) நீளமுள்ள 234 '66-கிலோவாட் 'டிரான்ஸ்மிஷன் கோடுகள் நிறுவப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைக்கப்பட்ட குழந்தை இதய மருத்துவமனையின் தொடக்கத்துடன், இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் இருதயவியல் துறையின் மிகப்பெரிய மருத்துவமனையாக மாறும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகளைக் கொண்ட உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மருத்துவமனைகளில் ஒன்றாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் இந்த மருத்துவமனையின் விரிவாக்க திட்டம் முடிந்ததும், மருத்துவ படுக்கை எண்ணிக்கை 450லிருந்து ஆயிரத்து 251ஆக உயரும் என்றும், இந்த நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி கார்டியாக் கற்பித்தல் நிறுவனமாகவும், உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி இருதய மருத்துவமனையாக மாறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.