மூன்றாவது 'எதிர்கால முதலீடு முன்னெடுப்பு நடவடிக்கை' எனப்படும் எஃப்.ஐ.ஐ. கூட்டம் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்திலுள்ள அப்துல் அஸிஸ் மையத்தில் நடைபெறவுள்ளது. டாவோஸ் இன் டெஸர்ட் என்று கூறப்படும் இந்நிகழ்வானது சர்வதேச முதலீடு, சுற்றுலா மேம்பாட்டிற்கான உலக மக்களை ஈர்க்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இவ்விழாவின் தொடக்கவுரை மேற்கொள்ளவுள்ள சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு ஆணையத்தின் நிர்வாகி அல்-ருமயான் பன்முகத் தன்மை வாய்ந்த உலகச் சூழலில் முதலீட்டுக்கான திட்டமுறை குறித்து உரையாற்றவுள்ளார். இதில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி பங்கேற்று உலகப் பொருளாதாரத்தின் புதிய சகாப்தம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.
முகமது பின் சல்மான் ஆட்சியின் கீழ் இயங்கிவரும் எண்ணெய் சாம்ராஜ்யமான சவுதி அரேபியா அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு அந்நாட்டின் மாற்றுப் பொருளாதார நடவடிக்கைக்குத் திருப்புமுனையாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு இந்த முதலீட்டாளர்கள் நிகழ்வில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தாண்டு பங்கேற்கவில்லை. மேலும், செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பல்வேறு முன்னணி தொழிலதிபர்கள் கடந்தாண்டு நிகழ்வைப் புறக்கணித்தனர். அவர்கள் இந்தாண்டு பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ள மோடி தனது சிறப்புரையை இந்திய நேரப்படி இரவு எட்டு மணியளவில் மேற்கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் பங்கேற்க நேற்று சவுதி அரேபியா வந்தடைந்த மோடிக்கு அந்நாட்டு மன்னர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் மோடியின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. எனவே, இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நீண்ட கால பொருளாதார செயல்திட்டங்கள், நிதிச்சந்தைகள், தற்கால பொருளாதார நகர்வுகள் குறித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனர் ரே டேலியோவுடன் மோடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் மனிதவளம், சுற்றுச்சூழல், உள்நாட்டு வளர்ச்சி, தன்னிறைவு வாழ்க்கை போன்ற கருப்பொருள்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்ற மோடி முதலீட்டு நடவடிக்கை குறித்து பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். மோடியின் நட்புறவுக் கொள்கையில் ஈர்க்கப்பட்ட சவுதி அரேபிய அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதை மோடிக்கு அளித்துக் கௌரவித்தது.
இந்தியா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளைத் தனது கூட்டுறவு சக்தியாகக் கொண்டுள்ள சவுதி அரேபியா தனது முக்கியக் கொள்கை முடிவுகளை இந்நாடுகளுடன் கொண்டுள்ளது. குறிப்பாக எரிசக்தி வர்த்தகம் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்ட நாடுகளுடன் செய்துள்ளது.
சவுதி அரேபிய நிறுவனமான அரம்கோவுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி மகாராஷ்டிர மாநிலம் ராய்காட்டில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படவுள்ளதாக வெளியுறவுத் துறைக்கான பொருளாதாரப் பிரிவு செயலாளர் டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய பேச்சுவார்த்தையின்போது இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும் அல்ஜெரி என்ற சவுதி அரேபிய நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியில் சவுதி அரேபியாவின் பங்களிப்பு இதன்மூலம் உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் இந்தச் சந்திப்பில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் உள்ள 26 லட்சம் இந்தியர்கள் ஆண்டுதோறும் 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பணத்தை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். சுற்றுலாவில் தற்போது கவனம் செலுத்திவரும் சவுதி அரேபியா, பெண் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பர்தா போன்ற கட்டுப்பாடுகளை தற்போது தளர்த்தியுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு மதங்களைச் சார்ந்த பயணிகளை தங்கள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என்ற நம்பிக்கையில் இது போன்ற மாற்றங்கள் சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது.