நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் 302 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் மாலை 7 மணிக்கு நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
மோடியின் இந்த பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் அதிபர் சரோன்பே ஷரிபோவிச் ஜூன்பிகோவ் (Sooronbay Sharipovich Jeenbekov), மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நோட் ( Pravind Jugnauth) ஆகியோருக்கு இந்திய வெளியுறுவுத் துறை அழைப்புவிடுத்துள்ளது.
இது தவிர, பங்களாதேஷ், பூட்டான், மயன்மார், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய பிம்ஸ்டெக் ( Bay of Bengal Muti-Sectoral Technical and Economic Cooperation) நாடுகளின் தலைவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
2014ல், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மூன்று ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரநிதிகள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாளம் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கெய், மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.