மக்களவைத் தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கம், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 59 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை (மே19) நடக்கிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனிதத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றுள்ளார். கோயிலில் வழிபாடுகளை முடித்துவிட்டு, அப்பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து உள்ளூர் அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து, அங்குள்ள ஒரு குகையில் தியானம் செய்து வருகிறார்.
இந்த பயணத்தின்போது மோடி 'ஜோபா' என்று அழைக்கப்படும் அங்கியையும், இடுப்பைச் சுற்றி காவி துண்டையும் உடுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, அவரது தலையில் ஹிமாச்சலி தொப்பியும் அணிந்திருந்தார். 'ஜோபா' அங்கியானது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தேசிய கவிஞரான ரவீந்தரநாத் தாகூரால் பிரபலமாக்கப்பட்டதாகும். மோடி இடுப்பில் கட்டியிருக்கும் காவி துண்டானது விவேகானந்தரை நினைவுபடுத்துகிறது. விவேகானந்தரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்தான்.
இதன்மூலம், மேற்கு வங்கம் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் நாளை வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களுடன் தானும் ஒருவன்தான் என்பது போன்று மோடி உடை அமைந்திருந்தது.