சென்னை வழியாக கடலுக்கடியில் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அதிவேக தொலைதொடர்பு சேவையினை நாளை (ஆகஸ்ட் 10) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளார். இந்நிலையில், இன்று அங்குள்ள பாஜக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், “அந்தமான் நிக்கோபர் மற்றும் 12 தீவுகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. அந்தமான் & நிக்கோபாரில் கடல் உணவு, கரிம பொருட்கள் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகள் தொடர்பான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம்.
இந்தியாவின் பன்முகத்தன்மையால், பல்வேறு பகுதிகளில், பல்வேறு தொழில்களை உருவாக்க முடியும் என்பது நாட்டிற்கான அதிர்ஷ்டம். புதிய இந்தியாவின் வளர்ச்சியில் முழு தேசமும் முன்னேற வேண்டும். அரசின் சிறிய நடவடிக்கைகளும் நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மக்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்கும் அதிவேக இணைய சேவை கிடைக்கவும், அதன் மூலம் தொற்றுநோய்களுக்கு மத்தியில், அனைத்து வகையான ஆன்லைன் சேவைகளின் நன்மைகளையும் மக்கள் பெற இயலும் என நம்புகிறேன்” என்றார்.