ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்னும் வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடுவார். வழக்கமாக காலை 11 மணியளவில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது, குடியரசு தினத்தால் மாலையில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரச்னை, சாதனைகள், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான யோசனைகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார்.
அவ்வாறு நேற்று உரையாற்றும்போது மழைநீர் சேகரிப்புக்காக, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்தும் யுக்தியை தமிழ்நாடு அரசிடமிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற திட்டங்கள்தான் புதிய இந்தியாவை உருவாக்க உறுதுணையாக இருப்பதாகவும் பாராட்டினார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிகள் குறித்துப் பேசினார். அப்போது இந்தியாவிலும் டேவிட் பெக்காம் என்று ஒருவர் இருப்பதாகக் கூறினார். இது குறித்துப் பேசிய பிரதமர், “இங்கிலாந்து நாட்டின் கால்பந்து ஜாம்பவானான டேவிட் பெக்காமை அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால், இந்தியாவிலும் ஒரு டேவிட் பெக்காம் உள்ளார். அவரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; எனக்குத் தெரியும். அவர் கவுகாத்தியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு புதிய சாதனை ஒன்றையும் படைத்தார்” என்றார்.
டேவிட் குறித்து மேலும் கூறிய பிரதமர், ”சில நாள்களுக்கு முன் நான் அந்தமான் - நிக்கோபர் தீவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் டேவிட் பெக்காமை பார்த்தேன். சிறுவயதிலேயே தாய்தந்தையை டேவிட் இழந்துள்ளார். அவரைக் கவனித்துக்கொண்ட அவரது மாமா, கால்பந்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று ‘டேவிட் பெக்காம்’ என்று பெயரிட்டுள்ளார். ஆனால், சைக்கிள் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட டேவிட், கால்பந்தை விடுத்து அதனைத் தேர்ந்தெடுத்து இன்று வெற்றியும் கண்டுள்ளார்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!