ராய்ப்பூர்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்வோர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. இதன் காரணமாக வரும் காலங்களிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 22 மாவட்ட தலைமையகங்களில் கட்டப்படவுள்ள கட்சி அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று (ஆக.20) நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “அமைப்புசாரா பொருளாதாரம் நாட்டின் 90 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், மோடி அரசாங்கம் அதை பணமதிப்பிழப்பு மற்றும் 'தவறான ஜிஎஸ்டி' அமல்படுத்துதல் போன்ற நகர்வுகள் மூலம் அழித்தது.
இந்தியாவில் இரண்டு வகையான பொருளாதாரம் உள்ளது. ஒன்று அமைப்புசார் பொருளாதாரம், அதில் பெரு நிறுவனங்கள் உள்ளன. மற்றொன்று அமைப்புசாராத பொருளாதாரம், இதில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்வோர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஏழை மக்கள் உள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக அமைப்பு சாரா தொழிலாளர்களின் பொருளாதாரத்தை தாக்கி வருகிறது. இந்த துறையில் உள்ள பணத்தை பெரு நிறுவனங்களுக்கு மாற்றும் நோக்கத்தில் இதை செய்கிறார்.
காங்கிரஸ் அரசாங்கம் எந்த மாநிலங்களில் இருந்தாலும், நாங்கள் அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா பொருளாதாரங்களை சமநிலைப்படுத்த தொடர்ந்து செயல்படுகிறோம்.
மேலும், அமைப்புசாரா பொருளாதாரம் மோசமான வகையில் உறிஞ்சப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் அமைப்புசாரா பொருளாதாரம் பாதுகாப்பாகவும் வலுவாகவும் இருந்தால், அது எந்தவிதமான மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும்.
எங்கள் தாய்மார்களும், சகோதரிகளும் தங்கள் வீட்டில் பணத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள். இது திடீரென ஏற்படும் மோசமான சூழ்நிலையை சமாளிக்க உதவும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் மீதான முதல் தாக்குதல் பிரதமர் மோடி செயல்படுத்திய பணமதிப்பிழப்பு செயல்முறை. அவர் மக்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யச் செய்தார். பின்னர் அந்த பணத்தால் தன்னுடைய நண்பர்களான 10 முதல் 15 தொழிலதிபர்கள் மற்றும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தார். பின்னர் சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சரிவுக்கு வழிவகுத்த ஜிஎஸ்டியை விதித்தார்.
பிரதமர் மோடி எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தினார். ஏன் திடீரென அதனை செயல்படுத்தினார்.? அமைப்புசாரா தொழிலாளர்களை குறிவைத்தே அந்த நடைமுறையும் செயல்படுத்தப்பட்டது.
90 சதவீத வேலை வாய்ப்பு அமைப்பு சாரா தொழில்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மோடி இந்த அமைப்பை அழித்துவிட்டார். இதனால், ஒவ்வொரு நிறுவனங்களாக வீழ்ச்சியடைந்து சிறு, குறு நிறுவனங்கள் அழிந்துவிடும்.
இது ஏற்கனவே தொடங்கிவிட்டது. வரும் காலங்களில் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியாது. சிறு குறு நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் இதுவே முதல்முறை” என்றார்.
இதையடுத்து, சிதைக்கப்பட்ட அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா பொருளாதாரத்தின் சமநிலையை மீட்டெடுக்க அழைப்புவிடுத்தார்.
மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிடச் செய்து வெறுப்பை பரப்புகின்றனர். இதற்காக தலைவர்களையும், தொண்டர்களையும் ஒன்றிணைக்க உழைக்குமாறு அழைப்புவிடுத்தார்.
இந்நிகழ்வில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சத்தீஸ்கர் ஏ எல்.சி.சி பொறுப்பான பி எல் புனியா, மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மற்றும் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்தத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆட்சி நடத்த தெரியாமல், காங்கிரசை விமர்சிப்பதா? கபில் சிபல் கேள்வி