குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு மலையாள செய்தி சேனல்களுக்கு செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இரண்டு நாள்கள் தடைவிதித்தது.
இன்று காலை சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, மீண்டும் ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. சேனல்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "தவறான தகவல்கள் பரப்பிய இரண்டு கேரள சேனல்கள் 48 மணி நேரம் தடைசெய்யப்பட்டன.
அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை உடனடியாக கண்டுபிடித்தோம், இதனால் சேனல்களின் ஒளிபரப்பை உடனடியாக மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது. ஜனநாயக அமைப்பிற்கு பத்திரிகை சுதந்திரம் என்பது முற்றிலும் அவசியம் என்பதே எங்களின் கருத்து.
இந்தப் பிரச்னை குறித்து தகவல்களைக் கேட்டறிந்துவருகிறேன். உண்மையில் தவறு ஏதேனும் நிகழ்ந்திருந்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் செய்தி சேனல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்தார்" என்றார்.
இதையும் படிங்க: ராகுலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் - காங்கிரஸ் விளக்கம்