பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், உறுப்பினர்கள் நாடாளுமன்ற நூலக கட்டடத்திற்கு வருகைபுரிந்தனர்.
பாஜக தலைவரும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாஜக தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு முகமூடி அணிந்து வந்திருப்பதைக் காண முடிந்தது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்திகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் டெல்லி வன்முறை, வங்கித் துறையில் ஏற்பட்ட நெருக்கடி குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: கார்கிலில் 144 தடை உத்தரவு