மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த சில வாரங்களாக அம்மாநில அரசியலில் பல்வேறு அதிரடித் திருப்பங்கள் அரங்கேறிவந்தன.
இறுதியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதென முடிவுசெய்து பல்வேறு சிக்கல்களைக் கடந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சிவசேனா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்று காலை மும்பை புறப்பட்டுச் சென்ற ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாக இன்று பிற்பகல் மும்பையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!