கரோனா ஊரடங்கின் காரணமாக, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு 'வந்தே பாரத்' திட்டத்தை, கடந்த ஏழாம் தேதி அறிமுகப்படுத்தியது. அதன்படி, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, பல்வேறு இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், ஈரானுக்கு ஆன்மிகப் பயணம் சென்ற லடாக்கைச் சேர்ந்த 310 பேர் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதுகுறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை 13,000 பேர் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் லண்டன், அபுதாபி, துபாய் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 812 பேர் நேற்று மீட்கப்பட்டுள்ளனர் என்றும்; தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.
நேற்று தொடங்கியுள்ள 'வந்தே பாரத்' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 40 நாடுகளுக்கு 149 சிறப்பு விமானங்கள் இயக்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'குடிபெயர்ந்தோருக்காக இதுவரை 1,034 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன'