ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சையத் வாஹித் (23) என்பவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் தனியார் கல்லூரியில் பயின்றுவந்தார். அவர் 2018 டிசம்பர் 12ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்து, அது தொடர்பான விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சையத்தின் தந்தை தொலைபேசிக்கு திடீரென்று அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், 'உங்கள் மகன் தற்போது பாகிஸ்தான் சிறையில் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதற்கான பணிகளை விரைந்து செய்யுங்கள். இதை சையத் வாஹித் உங்களிடம் சொல்லச் சொன்னார்' என்று கூறியுள்ளார். தொலைபேசிக்கு அழைத்தவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையானவர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சையத்தின் தந்தை, தன் மகனை மீட்டுத் தருமாறு காவல் துறையினரிடம் மனு அளித்தார். அப்போது, நடந்தவற்றையெல்லாம் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பு குறித்து காவல் துறையினர் விசாராணை செய்துவருகின்றனர். வந்த அழைப்பு உண்மையானதுதானா? அல்லது வேறு யாரேனும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அழைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.