ராஜஸ்தானில் உள்ள சுரு நகரில் எட்டு வயது சிறுவனை, வயதில் மூத்த இரண்டு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து சுரு காவல் நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். ஆனால், இவ்விவகாரத்தில் காவல் துறையினர் இந்த வழக்கை ஏற்க மறுத்து, சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். பின்னர், நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, இந்த வழக்கு கோட்வாலி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து காவலர் கூறுகையில், "எட்டு வயதான சிறுவன் அதே பகுதியில் வசித்து வந்த மற்ற இரண்டு மைனர் சிறுவர்களால் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டார். இச்சம்பவம் ஜூலை மூன்றாம் தேதி அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பத்திற்கு இந்த விஷயத்தைப் பற்றி தெரிவித்தால், சிறுவனைக் கொன்றுவிடுவதாக குற்றவாளிகள் மிரட்டியுள்ளனர்.
ஆனால், சந்தேகத்தின் பேரில், சிறுவனின் பெற்றோர்கள் விசாரித்ததில் இந்தக் கொடிய செயல் பற்றி தகவல் தெரியவந்தது. பின்னர் சிறுவனின் பெற்றோர் அளித்தப் புகாரின் அடிப்படையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்" என்று தெரிவித்தார்.