இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இருப்பினும், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இந்நிலையில், கர்நாடகா தலைநகரில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த, மண்டலம் வாரியாக அமைச்சர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்க முதலமைச்சர் எடியூரப்பா முடிவுசெய்துள்ளார். கரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் ஜே.சி. மதுசாமி கூறுகையில், "கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் தலைநகர் பெங்களூருவில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பாளராக ஒரு அமைச்சரை நியமிக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளார், இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்குமான பொறுப்பாளர்களை முதலமைச்சரின் செயலர் எஸ்.ஆர். விஸ்வநாத் விரைவில் நியமிப்பார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்கப்பட்டது. கரோனா பரிசோதனைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை தாலுகா மற்றும் மாவட்ட அளவிலான கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இருப்பினும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து விவாதிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். கர்நாடக மாநிலத்தில் புதன்கிழமை மட்டும் 2 ஆயிரத்து 62 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் ஆயிரத்து 148 பேர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கரோனாவுக்குப் பிறகான உலகை மீட்டெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்' - பிரதமர் மோடி