கரோனா ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வழங்காமல் அந்த வீட்டுக்கே பொதுப்பணித்துறை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
புதுச்சேரியில் மொத்தம் 3 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில், ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஏழை மக்களுக்கான சிவப்பு குடும்ப அட்டைகள், ஒரு லட்சத்து 56 ஆயிரம் மஞ்சள் குடும்ப அட்டைகள் உள்ளன.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஏம்பலம் சட்டப்பேரவை தொகுதி சேலியமேடு, கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சமூக நலம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கந்தசாமி மஞ்சள் நிற குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு, தலா 10 கிலோ வீதம் இரண்டு மாதத்திற்கான 20 கிலோ அரிசி வழங்கினார்.
சேலியமேடு மற்றும் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டு அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.