சத்தீஸ்கர் மாநிலம் ராய்கார் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் காகித ஆலையிலிருந்து வெளியான விஷவாயு தாக்கியதில் அங்கு ஆலையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஏழு பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் ஏழு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் தலைமையில் விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் முதல்கட்டமாக ஆலையில் பணிபுரிந்துவந்த மில் ஆப்ரேட்டர் ரஞ்சீத் சிங் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பின்னர் காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
ரஞ்சீத் சிங் மீதும், ஆலையின் உரிமையாளர் மீதும் கொலை குற்றச்சதி, குற்றத்தை மறைத்தல், கவனக்குறைவாகச் செயல்படுதல், கொலை முயற்சி ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளரைக் காவலர்கள் தேடிவருகின்றனர்.
இதனிடையே தொழிற்சாலையில் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை எனவும் ஆலையைச் சுத்தும் செய்யும்போது முறையான பயிற்சிபெற்றவர்கள் யாரும் இல்லை என்பது தொழில்துறை சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துணை இயக்குநர் எம்.கே. ஸ்ரீவாஸ்தவ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்திற்குப் பின்னர் இந்த ஆலைக்கு தற்போது சீல்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கி 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!