புதுச்சேரி கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புதுச்சேரியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் வரியை உயர்த்தி வழங்கக்கோரி முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 4-வது நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது புதுச்சேரியில் பால் விலை உயர்த்தப்படுவது தொடர்பாக பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, பேசிய அவர் புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதாவது சமன்படுத்திய பால் லிட்டர் ரூ.36-ல் இருந்து ரூ.42 ஆகவும், சிறப்பு சமன்படுத்திய பால் லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டதாகவும், இதேபோல் நிலைப்படுத்திய பால் ரூ.42-ல் இருந்து ரூ.48 ஆக உயர்த்தப்பட்டதாக அறிவித்தார்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த பால் விலை உயர்வு நாளை முதல் அமுலுக்கு வருவதா முதல்வர் நாராயணசாமி அறிவிதுள்ளார்” என்றார்.