நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் 73வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மத்திய அரசு தகுந்த இடைவெளிகளைக் கடைபிடித்து, முகக் கவசங்களை அணிந்து சுதந்திர நிகழ்வில் பங்கேற்கலாம் எனவும், வழக்கம் போலவே, முதலமைச்சர் கொடி ஏற்றி நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும் மத்திய அரசு தெரிவிந்திருந்தது.
இதையடுத்து, சுதந்திர அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ள காவலர்கள், சீருடைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக நாடு முழுவதும் ஒரு பதினைந்து நாள்களுக்கு ராணுவக் குழுக்கள் நிகழ்த்தும் ஒத்திகைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், போர்பந்தர், ஹைதராபாத், பெங்களூரு, ராய்ப்பூர், அமிர்தசரஸ், கௌகாத்தி, அலகாபாத் மற்றும் கொல்கத்தாவில் இதுவரை ராணுவம், கடற்படை மற்றும் காவல்துறை குழுக்கள் ஒத்திகை நிகழ்ச்சிகள் நிகழ்த்தியுள்ளன.
இந்த நிகழ்ச்சிகள் தங்கள் உயிரை கருத்தில் கொள்ளாது ஆபத்தான இந்த காலகட்டத்தில் நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உறுதியுடன் போராடி வரும் கரோனா வீரர்களுக்கு தேசம் சமர்பிக்கும் நன்றியுணர்வு மற்றும் பாராட்டிற்கான அடையாளம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவ மற்றும் காவல் துறையின் குழுக்கள் விசாகப்பட்டினம், நாக்பூர் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களில் இன்று ஒத்திகை நிகழ்த்தும். ஆகஸ்ட் 7ஆம் தேதி, ஸ்ரீநகர் மற்றும் கொல்கத்தாவில் இராணுவக் குழுக்களின் ஒத்திகை நிகழ்ச்சியும், முத்தரப்பு இசைக்குழு டெல்லியில் மூன்று நிகழ்ச்சிகளையும், செங்கோட்டை, ராஜ்பாத் இந்தியா கேட் ஆகிய இடங்களில் முறையே ஆகஸ்ட் 8, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி மும்பை, அகமதாபாத், சிம்லா மற்றும் அல்மோராவிலும்; ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி, தேதி சென்னை, நசிராபாத், அந்தமான் & நிக்கோபார், இம்பால், போபால் மற்றும் ஜான்சி ஆகிய இடங்களிலும் ஒத்திகை நடைபெறும்.
இந்தத் தொடரின் இறுதி நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி லக்னோ, பைசாபாத், ஷில்லாங், மதுரை மற்றும் சம்பரன் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.