கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. இந்த திடீர் ஊரடங்கால் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலோனாருக்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு பகுதிகளில் அடைக்கலம் தந்துள்ளனர். இருப்பினும் ஒருசிலர் வேறுவழியின்றி தங்களது சொந்த ஊருக்கு நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கேரளாவில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலம் முழுவதுமுள்ள 20 ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை அரசு வழங்கிவருகிறது.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் சத்திபரம்பு மார்க்கெட் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 40 பேர் தங்களது சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்லும் படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல் துறையினர் அளித்த உறுதியையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் பாதிப்பால் தவிக்கும் விவசாயிகள்!