ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வகையில், தெலங்கானா மாநிலத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர் ஒருவர், தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக 14 நாள்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, அவரை கிராமத்தில் 14 நாள்கள் தனிமை மையத்தில் வைத்திருந்தனர். இதில், மன உளைச்சலில் இருந்த தொழிலாளர், தனிமை விரக்தியில் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறுகையில், " முதற் கட்ட தகவல்களின்படி அவருக்கு சில மனநலப் பிரச்னைகள் இருந்துள்ளன. பல ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்கொலைக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி: 9 மாதங்களுக்குப் பின்பு போலீஸ் விசாரணையில் சிக்கினார்