மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் வன உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு கடந்த வியாழக்கிழமை இரவு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரியல் பூங்காவின் பெரிய சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு புலி வசிப்பிடத்திற்கு சென்ற அவர் இரவு முழுவதும் அங்கேயே தூங்கி உள்ளார்.
பின் வெள்ளிக்கிழமை காலை இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு ஊழியருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து உயிரியல் பூங்காவில் இருந்த மற்ற ஊழியர்களின் உதவியோடு அவர் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இரவில் புலி கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் அவர் உயிர் தப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அருகேயுள்ள கிருஷ்ணா நகரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ரவிந்திர சசேனே என்பது தெரியவந்தது.
இதையடுத்து சசேனே காவல்துறையினரால் அவரின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அவுரங்காபாத் வன உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: வனச்சாலையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்!