தகவல் தொழில் நுட்பத்திற்கான நிலைக்குழுவின் கூட்டத்தில் எட்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கரோனா நெருக்கடி, இணையப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய சேது பயன்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தக் கூட்டம் நடைபெற்றது.
நாட்டின் "இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு" அச்சுறுத்தலாக இருந்த டிக்டாக், வீசாட் மற்றும் ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகள் மீதான தடையை நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வரவேற்றனர். மேலும், பப்ஜி போன்ற செயலிகளை தடை செய்யக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கேம் ஸ்கேனர் செயலியை சில மாநில காவல் துறையினர் மற்றும் பிற அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாகவும், இதன்காரணமாக நாட்டின் தரவுகள் சீனாவுக்குச் செல்லக்கூடும் என்றும் நிலைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
29 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழுவில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக எட்டு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர்.