ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியின் மகள் இல்திஜா, ஆளுநர் ஜிசி முர்முக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
உங்களுக்கு தெரியுமா? எனது தாய் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் கோவிட்-19 வைரஸ் தொற்று நோயினை எதிர்த்து போராடி வருகின்றன. உலக சுகாதார அமைப்பும் இதனை தொற்று நோயாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்த வகை வைரஸ் பாதிப்பு நான்கு பேருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் நோயினை குணப்படுத்த இதுவரை மருந்துகள், தடுப்பூசிகள் என எதுவும் அறியப்படவில்லை. சுய கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்துதல் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துகிறது.
ஆகவே நெரிசலான மற்றும் சுகாதார பற்றாக்குறையான சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளை இந்த தொற்று எளிதில் தாக்கக் கூடும். இந்தியாவில் உள்ள சிறைகள் தொற்று நோயின் மையமாக மாறக் கூடும்.
பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்ற அடிப்படை நோய்கள் கொண்டவர்கள் கோவிட்19 தாக்குதலுக்கு எளிதில் ஆளாகின்றனர்.
மேலும் சிறைகளிலுள்ள தங்களின் குடும்பத்தினரையும் அவர்களால் காண முடிவதில்லை. ஆகவே மேற்கூறிய சூழ்நிலைகளை மனதில் வைத்து, அனைத்து கைதிகளையும் உடனடியாக விடுவித்து அவர்களை சொந்த ஊர் திரும்ப அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அமெரிக்காவில் உள்ள சிறைகள் கூட கைதிகளை விடுவித்து வருகின்றன. நாம் ஒரு அசாதாரண மருத்துவ நிலைமையில் உள்ளோம். உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.
ஆகவே எனது கோரிக்கையை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கைதிகளில் ஒவ்வொருவரின் கூட்டு ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் மெகபூபா மகள் இல்திஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. அப்போது மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரின் தடுப்புக் காவல் தொடர்கிறது.
இதையும் படிங்க: கரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழக இளைஞர் தற்கொலை?